காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

பகற்கொள்ளைக்கு வழிவகுக்கும் ஹஜ் கட்டணங்கள்

Haj_Fee

ஏ.ஆர்.ஏ. பரீல்: 

2012 ஆம் ஆண்டின் ஹஜ் குழுவின் தலைமைத்துவ போட்டிகள் திணைக்களத்தின் பணிப்பாளரை நீதி மன்றப் படிகளை மிதிக்க வைத்து விட்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகள் புதிய வடிவம் பெறவுள்ளன.

2013 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற் பாடுகள் முகவர் நிலையங்களிடம் கையளிக்கப்படாது முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் சிரேஷ்ட அமைச்சரும் 2012 ஆம் ஆண்டின் ஹஜ் குழுவின் இணைத் தலைவருமான ஏ.எச்.எம்.பெளஸி உறுதியாக இருக்கிறார்.

2013 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்பாடுகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மூலமே மேற்கொள்ளப்படும். இதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. உம்ரா பயண ஏற்பாடுகளையும் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது என்று அண்மையில் சிரேஷ்ட அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயண முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சலசலப் பினையும் ஏற்படுதியுள்ளது.

2012 ஆம் ஆண்டிற்கான ஹஜ் கட்ட ணமாக 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவே அறவிடப்பட வேண்டும். இதனை மீறும் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹஜ் குழு உத்தரவு பிறப்பித்திருந்தும் சில ஹஜ் முகவர்கள் 7 இலட்சம் ரூபா வரையில் ஹஜ் பயணிகளிடமிருந்து கட்டணம் அறவிட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையிலேயே பெளஸி குறிப்பிட்ட புதிய ஏற்பாடுகள் தொடர் பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பெளஸியின் கருத்துக்கு முகவர் நிலையங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மிகவும் அனுபவம் வாய்ந்த நீண்ட கால வரலாறுடைய ஹஜ் முகவர் நிலையத்தை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவிய போது தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாத முகவர் நிலைய உரிமையாளர் பின் வருமாறு விளக்கமளித்தார். ஹஜ் முகவர் நிலையங்கள் நாட்டின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. உல்லாச பயண சபை, சிவில் விமான போக்குவரத்து உட்பட பல அனுமதிப்பத்திரங்களை முகவர் நிலையங்கள் பெற்றுள்ளன. இவ்வாறான முகவர்களை வீட்டில் நில்லுங்கள் ஒன்றும் செய்யாதீர்கள் ஹஜ் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றால் அது எவ்வகை யில் நியாயமாகலாம்.

சுமார் 73 ஹஜ் முகவர் நிலையங் களுக்கு 2012 இல் அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இவர்களின் சேவை நிறுத்தப்பட்டால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை அமைச்சர் பெளஸி அறிந்துகொள்ளாமலிருப்பது கவலைக்குரியதாகும். 73 ஹஜ் முகவர்கள் செய்யும் பணியை தனித்து முஸ்லிம் சமய கலாசாரதிணைக்களத்தினால் செய்ய முடியுமா?

இலங்கையிலிருந்து சவூதி அரேபியா வுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச்செல்லும் முஸ்லிம்கள் திணைக்களத்திடமிருந்து ஒரு கடிதத் தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெற்றுக்கொண்டாலே விசா வழங்கப்படும். இந்த கடிதத்தைப் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தம் ஊரிலிருந்து பள்ளிவாசல் கடிதங் களைப் பெற்று நேரில் திணைக்களத்துக்கு சமூகமளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இதில் ஊழல்கள் நடைபெறுகின்றன. வேலை வாய்ப்பு முகவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் சமூகமில்லாது திணைக்களத்தில் குறிப்பிட்ட கடிதத்தை பெற்றுக் கொள்கின்றனர். இதில் ஊழல் நடக்கிறது. இந்த விடயத்திலே ஊழல்கள் என்றால் ஒரு பாரிய புனித பணியான ஹஜ் ஏற்பாடுகளை எவ்வாறு திணைக்களத்தினால் மேற்கொள்ள முடியும்.

ஹஜ் ஏற்பாடுகளில் ஊழல்கள் இடம்பெறாமலிருப்பதற்கும் சிறப் பான எதுவித குறைகளுமற்ற சேவைகளுக்கும் ஹஜ் குழுவுக்கு ஒருவரே தலைவராக இருக்க வேண்டும். ஹஜ் குழு புத்திஜீவிகள், உலமாக்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயற் பட வேண்டும்.

2012 ஆம் ஆண்டிற்கான ஹஜ் கட்டணம் 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என்றே ஹஜ் குழுவினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது நியாயமான கட்டணமாகும். எனக்கு திணைக்களத்தினால் 75 கோட்டாக்கள் வழங்கப்பட்டன. 75 ஹஜ் பயணிகளை தலா 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கட்டணத்தில் அழைத்துச் சென்று, சகல வசதிகளையும் வழங்கி, எனக்கு இலாபமாக 15 இலட்சம் ரூபா கிடைத்தது. எனவே, ஒரு பயணிக்கு மொத்த செலவு சுமார் 4 இலட்சம் ரூபாய்களாகும். எனக்கு கிடைத்த 75×25,000 =18,75000/= ரூபாயில் வேலையாட்கள் உட்பட எனது செலவுகளையும் கழித்தால் எனக்கு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது.

செலவு விபரங்கள் (ஒருவருக்கு)
சவூதியில் யுனைட்டட் ஏஜென்ஸிக்கு வரி 1029 ரியால்
மக்காவில் தங்குமிட கட்டணம் 1400
மதீனாவில் தங்குமிட கட்டணம் 1400
(சில முகவர்கள் 1000 முதல் 1150 ரியால்களிலும் தங்குமிடங்களை ஏற்பாடு செய்திருந்தனர்)
அஸீஸியாவில் தங்குமிட கட்டணம் 1200
உணவு கட்டணம் 1000
மு அல்லிம் கட்டணம் 1050
புகையிரத சேவை கட்டணம் 250
(மினா – அரபா)
ஏனைய செலவுகள் 500
மொத்தம் 7829 ரியால்கள்
7829 து 36 (ரூபாயில்) 2,81,844 ரூபாய்
விமான பயணச்சீட்டு 1,18,000
மொத்த செலவு 3,99,844/=

ஒரு முகவர் நிலையம் தனக்குக் கிடைத்த 50 கோட்டாக்களை ஒரு பயணியிடமிருந்து 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா அறவிட்டு அழைத்துச் சென்றிருந்தால் அம் முகவர் நிலையம் 5 மில்லியன் ரூபாய்களை வருமானமாகப் பெற்றிருக்கும்.

இதே வேளை சில முகவர் நிலையங்கள் 6 இலட்சம், 7 இலட்சம் ரூபாய்கள் அறவிட்டிருப்பது அநீதியாகும். இது பகற்கொள்ளையாகும். புனித பயணத்தில் சூறையாடப்பட்டதாகும். இவர்களை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

அரபா – மினாவுக்கிடையிலான புகையிரத பயணத்துக்காக முகவர் நிலையங்கள் 250 ரியால்களை ஹஜ் பயணிகளிடமிருந்து அறவிட்டிருந்தன. ஆனால் சுமார் 1200 இலங்கை ஹஜ் பயணிகள் புகையிரதத்தில் பயணிக் வில்லை. பஸ்களில் (இலவச சேவை) பயணித்தனர். புகையிரத பயணத்திற்காக இவர்கள் செலுத்தியிருந்த கட்டணத்தை முஅல்லிம்கள் ஹஜ் முகவர்களிடம் திருப்பி கையளித்திருந்தனர். ஆனால், இந்தப்பணம் முகவர்களினால் ஹஜ் பயணிகளுக்கு மீள கையளிக்கப்படவில்லை.

இவ்வருடம் 73 ஹஜ் முகவர்களுக்கு கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. என்றாலும் 44 ஹஜ் முகவர் குழுக்களே சவூதியில் பதிவு செய்யப்பட்டன. குறைவாக கோட்டாக்கள் கிடைத்த (சுமார் 25 கோட்டாக்கள்) முகவர்கள் கோட்டாக்களை ஏனைய முகவர் நிலையத்துக்கு ஒரு கோட்டா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் விற்பனை செய்து 25 இலட்சம் ரூபாவை எதுவித சிரமங்களுமின்றி சம்பாதித்துக் கொண்டனர். ஹஜ் கட்டண அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கட்டாரில் தொழில் செய்யும் மாத்தளையைச் சேர்ந்த ஒரு தம்பதியினரை நான் சந்தித்தேன். அவர்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் ஊடாகவே ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அவர்களிடம் 7 இலட்சம் ரூபா வீதம் இருவருக்குமாக 14 இலட்சம் ரூபா அறவிடப்பட்டிருக்கிறது. அவருக்கு மக்காவில் தங்குமிட வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. அஸீஸியாவிலே தங்கியிருந்தார்கள். மதீனாவுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை. அவர் இந்த விபரங்களை என்னிடம் தெரிவித்து கவலைப்பட்டார்.

சில முகவர் நிலையங்கள் நட்சத்திர ஹோட்டல்களின் தங்குமிட வசதிகளைச் செய்வதாகவும் பல வசதி வாய்ப்புகளை வழங்குவதாகவும் இதனாலே அதிகளவு கட்டணத்தை வசூலித்ததாகவும் பயணிகளை ஏமாற்றுகின்றனர்.

நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விசேட வசதிகளை வழங்கினாலும் நான் பட்டியலிட்டுக் காட்டியுள்ள செலவுகளுக்கு மேலாக 50 ஆயிரம் ரூபாவை அதிகரிக்க முடியும்.
ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு பதிவிலக்கங்களின் அடிப்படையில் பயணிகளின் தேர்வு இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. என்றாலும், ஹஜ் கடமைகளின் அனைத்து பணிகளையும் ஹஜ்ஜாஜிகளே மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சுகதேகியான ஆரோக்கியமானவர்களையே திணைக்களம் தெரிவு செய்ய வேண்டும். நோயாளிகள் தெரிவு செய்யப்படுவதால் ஹஜ் முகவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி யேற்படுகின்றது. எனவே, ஹஜ்ஜுக்குப் பணத்துடன் உடல் ஆரோக்கியமும் அவசியமாகும்.

ஹஜ் முகவர்கள் தெரிவு செய்யப்படும் போது, தகுதி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதில் அரசியல் செல்வாக்கு இடம்பெறக்கூடாது.

ஹஜ் முகவர்களின் பணியை முஸ்லிம் கலாசார திணைக்களம் மேற்கொள்ள முயற்சிப்பது எவ்வகையிலும் நடைமுறைக்கு சாத்தியமாகாது. இவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளமை மேலும் சிக்கல்களையும் குளறுபடிகளையுமே உருவாக்கும். இதற்கு எதிராக ஹஜ் முகவர்கள் நிச்சயம் கிளர்ந்தெழுவார்கள். எனவே அமைச்சர் பெளஸி தனது நிலைப் பாட்டினை மீள் பரிசீலனை செய்வது நன்மையளிப்பதாக இருக்கும்.

இதேவேளை ஹஜ் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேலதிகமாக கட்டணம் அறவிட்ட முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும். தண்டனை வழங்குவதன் மூலமே அடுத்து வரும் வருடங்களில் ஹஜ் குழுவின் கட்டண நிர்ணயங்களை சரியாக அமுல் நடத்துவது சாத்தியப்படும் என்றார்.
2012 இல் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் தாம் பயணித்த ஹஜ் முகவர்களுக்கெதிராக ஏதும் முறைப்பாடுகள் இருப்பின் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்பு எழுத்து மூலம் திணைக்களத்துக்கு அறிவிக்கும்படி பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியாயமான கட்டணத்தில் பிரச்சினைகளற்ற வசதிகளுடன் கூடிய ஹஜ் பயண ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அமைச்சர் பெள ஸியும் பணிப்பாளரும் இப்பணியை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறார்கள் என்று சமூகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
-Vidivelli-

Advertisements

Filed under: Islam

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None